நாமக்கல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 9 மாணவர்கள் உயிரிழப்பு என பரவும் வதந்தி!
நாமக்கல் அருகே தனியார் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 9 மாணவர்கள் உயிரிழப்பு என தவறான தகவல் பரவி வருகிறது.

Claim :
நாமக்கல் கல்லூரியில் உணவு சாப்பிட்ட 9 மாணவர்கள் உயிரிழப்பு என பரவும் தகவல்Fact :
கல்லூரி மாணவர்கள் அனைவரும் நலமாக உள்ளனர். பரவியது வதந்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே 10 வருடங்களுக்கும் மேலாக பிரபல தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளி மாவட்டம், மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளைச் சேர்ந்த சுமார் 4000 மாணவர்கள் படித்து வருகிறார்கள், அவர்களில் பலரும் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வருகிறார்கள். இந்த நிலையில் கல்லூரி விடுதியில் உணவு சாப்பிட்டு மாணவர்கள் பலருக்கும் அக்டோபர் 27,28 ஆகிய நாட்களுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.
சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சுமார் 5 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது. அதே சமயம் கல்லூரி மாணவர்கள் உடல்நிலை தொடர்பாக பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவத் தொடங்கின.
பரவும் தகவல்
பொறியியல் கல்லூரியில் வழங்கிய உணவை சாப்பிட்ட 9 மாணவர்கள் உயிரிழந்துவிட்டதாக ஒரு வாட்ஸ் ஆப் சேட் ஸ்க்ரீன் ஷார்ட் சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது. அதில், “எக்ஸெல் கல்லூரியில் போட்ட சாப்பாட்டை சாப்பிட்ட 9 மாணவர்கள் இறந்துவிட்டனர். கழிவுநீர் அனைத்திலும் கலந்ததுதான் இதற்கு காரணம். தண்ணீர் தொட்டி முழுக்க புழுக்களாக உள்ளது, அதனை சுத்தம் செய்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதனை பகிருங்கள். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனைப் பகிர்ந்த @gupthadhoni25 என்ற எக்ஸ் பதிவர், “ஊடகங்களில் செய்தி வெளிவராமலேயே யாரோ வழக்கை முடிக்க முயற்சிக்கிறார்கள். அதிகம் பகிருங்கள்” என்ற கேப்ஷனோடு ஸ்க்ரீன் ஷார்ட்டை பகிர்ந்தார்.
இதே ஸ்க்ரீன் ஷாட்டை பகிர்ந்த @PriyankaSmile01 என்ற பதிவர், “என்னங்கடா நடக்குது 😳” என்று பதிவிட்டு இருந்தார்.
மேலும் இங்கே வைரல் பதிவு ஷேர் செய்யப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் தகவலின் உண்மைத் தன்மையை TeluguPost உண்மை கண்டறியும் குழு ஆழ்ந்து சரிபார்ப்பு செய்ததில் அது தவறான தகவல் என்பதும், கல்லூரி மாணவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்பதும் தெரியவந்தது.
முதலில் நாமக்கல் தனியார் கல்லூரி மாணவர்கள் உடல்நிலை என்ற கீ வேர்டு துணையுடன் கூகுளில் தேடினோம். அதில் மாணவர்கள் உயிரிழந்ததாக எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை. மாறாக மாணவர்கள் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார்கள் என்ற செய்தியே நமக்கு கிடைத்தது.
விகடன் வெளியிட்ட செய்தியில், “மாணவர்களை பொறுத்தவரை 220 பேர் மருத்துவமனையில் அனுமதித்து உடல்நிலை சரியான உடன் வீடு திரும்பி உள்ளனர். பெரிய அளவில் மாணவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என நாமக்கல் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் ரங்கநாதன் தெரிவித்தார்” என்று குறிப்பிட்டுள்ளது.
மாணவர்கள் நலமாக உள்ளனர் என்றே தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, ஈடிவி பாரத் ஆகிய இணைய தளங்களும் செய்தி பதிவிட்டு இருந்தன.
மேலும் நமது தேடலில் நாமக்கல் மாவட்ட காவல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு கிடைத்தது. அதில், “மாணவர்கள் அனைவரும் உடல்நலத்துடன் உள்ளனர். ஆனால், அவர்களில் சிலர் இறந்துவிட்டதாக சமூக விரோதிகள் சிலர் சமூகத்தில் பதற்றத்தையும் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தும் வகையில் @Pokkiri_Victor, @PhoenixAdmk என்ற எக்ஸ் வலைதலங்களில் தவறான தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் பேரில், குமாரபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்று சமூக வலைதளங்களில் தவறான தகவல் பதிவேற்றம் செய்வோர் மீது சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இதேபோல தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பு தளமும் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், “ 128 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பி உள்ளனர். உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை. மேலும் உணவு தயாரிக்கும் இடம் மற்றும் பொருட்களைச் சீர் செய்து சுத்தப்படுத்தவும் உத்தரவிடப்பட்டது' என்று பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறை விளக்கம் அளித்துள்ளது. இச்சம்பவத்தில் மாணவர்கள் உயிரிழந்ததாக சமூக வலைத்தளங்கள் பரவும் செய்திகள் முற்றிலும் வதந்தியே” என்று தெரிவித்துள்ளது.
இந்த ஆதாரங்கள் மூலமாக கல்லூரியில் மாணவர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
நாமக்கல் அருகே கல்லூரியில் உணவு சாப்பிட்ட 9 மாணவர்கள் உயிரிழப்பு என பரவும் தகவல் உண்மைக்குப் புறம்பானது. உணவு ஒவ்வாமையால் சிகிச்சை பெற்ற மாணவர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர் என்பது தகுந்த ஆதாரங்களுடன் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, தகவல்களை பகிரும்போது ஆதாரங்களை சரிபார்த்து பகிரும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு வாசகர்களை கேட்டுக்கொள்கிறது.

