திருத்தணியில் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் இறந்துவிட்டதாக பரவும் வதந்தி
திருத்தணியில் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் வதந்தி பரவி வருகிறது.

Claim :
திருத்தணியில் வடமாநில இளைஞர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு என பரவும் தகவல்Fact :
வடமாநில இளைஞர் சிகிச்சைக்குப் பின் சொந்த ஊர் திரும்பிவிட்டார்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்திற்கு அருகே வடமாநில இளைஞர் ஒருவர் தலை, கை, கால்கள் வெட்டப்பட்ட நிலையில் ரத்த காயங்களுடன் மயங்கிக் கிடந்தார். அவருக்கு உடனடியாக திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒடிசாவைச் சேர்ந்த சுராஜ் என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். அவர்கள் சிறுவர் அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். வட மாநில இளைஞர் சுராஜை தாக்கி அதனை ரீல்ஸாக எடுத்து தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் அவர்கள் பதிவிட்டதும் தெரியவந்தது.
பரவும் தகவல்
ரயில் நிலையத்தில் தாக்கப்பட்ட இளைஞர் சுராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், வடமாநில இளைஞர் வெட்டுப்பட்டு கிடக்கும் புகைப்படம் இடம்பெற்றுள்ளன.
@profvenkat1981 என்ற எக்ஸ் பயனர், “எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியின் லட்சணம்.
#ripplelink #suraj #தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்ற தலைப்பு போய் தலை குனிந்து தமிழகமாக இன்று மாறி உள்ளது இதற்கு காரணம் திமுக அரசு தான் 😡😡இவர் இறப்புக்கு தமிழகமே வெட்கி தலை குனிய வேண்டும்” என்று புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
மேலும் பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூகவலைதளப் பக்கங்களிலும் புகைப்படம் வட மாநில இளைஞர் இறந்துவிட்டதாகவே பரவியது.
உண்மை சரிபார்ப்பு
வடமாநில இளைஞர் இறந்துவிட்டதாக வைரலாகும் தகவல் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது போலியானது என்பது தெரியவந்துள்ளது. அவர் உயிரிழக்கவில்லை, சிகிச்சைக்குப் பிறகு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார்.
வடமாநில இளைஞர் உடல்நிலை குறித்து செய்தி நிறுவனங்கள் என்ன குறிப்பிட்டுள்ளன என்று தேடினோம். பிபிசி தமிழ் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “வடமாநில இளைஞர் மருத்துவரிடம் கூறிவிட்டு சொந்த மாநிலம் சென்றுவிட்டார். அதனை கையெழுத்துப் போட்டுக் கொடுத்துள்ளார். அரசுத் தரப்பில் முறையான மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன என வடக்கு மண்டல ஐ.ஜி அஸ்ரா கார்க் கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சன் நியூஸ் வெளியிட்ட நியூஸ் கார்டில், “வட மாநிலத்தவர் என்பதால் தாக்குதல் நடக்கவில்லை. அவர் முறைத்துப் பார்த்தார் எனக் கூறி தாக்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட நபர் உயிரிழந்துவிட்டதாக தவறான தகவல் பரவுகிறது. அவர் சிகிச்சை முடிந்து சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார் - அஸ்ரா கார்க்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேபோல சன் நியூஸ் யூட்யூப் சேனல் அஸ்ரா கார்க்கின் முழு பேட்டியையும் வெளியிட்டுள்ளது. அதில், “வடமாநில இளைஞர் மிகவும் பாதுகாப்புடன் உள்ளார். சொந்த விருப்பத்தின் பேரில் கையெழுத்திட்டு கொடுத்துவிட்டே சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ளார். அவருக்கு தமிழக அரசின் சார்பில் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது” என்று அஸ்ரா கார்க் தெரிவித்துள்ளார்.
நாம் மேலதிக தேடலில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளதைக் கண்டறிந்தோம். அதில், “திருத்தணியில் தாக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர் இறந்ததாகப் பரப்பப்படும் தகவல் முற்றிலும் வதந்தி ! 27.12.2025 அன்று திருத்தணி ரயில்வே குடியிருப்பு அருகே சில நபர்களால் தாக்கப்பட்ட ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்ததாகப் பரவும் தகவல் தவறானது. பாதிக்கப்பட்டவர் சிகிச்சை பெற்ற பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளார். தவறான செய்தியைப் பரப்புவது சட்டப்படி குற்றமாகும்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில் திருத்தணியில் தாக்குதலுக்கு உள்ளான வடமாநில இளைஞர் உயிரிழக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம்.
முடிவு
திருத்தணியில் சிறுவர்களால் தாக்கப்பட்ட வடமாநில இளைஞர் உயிரிழந்துவிட்டதாக புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரவி வருகிறது. உண்மையில் அந்த இளைஞர் சிகிச்சைக்குப் பிறகு சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மைக் கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

