எடப்பாடி பழனிசாமி பரப்புரை வாகன முகப்பில் மோடி படமா? - உண்மை இதுதான்
எடப்பாடி பழனிசாமி பரப்புரை வாகன முகப்பில் பிரதமர் மோடி படம் இடம்பெற்றுள்ளதாக வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத் தன்மை சரிபார்ப்போம்.

Claim :
எடப்பாடி பழனிசாமி பரப்புரை வாகன முகப்பில் மோடி புகைப்படம்Fact :
பழனிசாமி பரப்புரை வாகன முகப்பில் ஜெயலலிதா படம்தான் உள்ளது, மோடி படம் இல்லை
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர், சசிகலா - ராமதாஸ் கூட்டணி என ஐந்துமுனை போட்டி நிலவி வருகிறது. அதிமுக கூட்டணியை திமுக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. வழக்கமாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெறும். ஆனால், இம்முறை எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று தொகுதிப் பங்கீடு குறித்து அமித்ஷாவிடம் பேசிவிட்டு வந்தார்.
அதேபோல தமிழ்நாட்டில் வழக்கமாக அதிமுகதான் கூட்டணிக்கு பெயர் வைக்கும், ஆனால் இம்முறை பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெயரிலேயே அதிமுக இயங்குகிறது. இதனால் பாஜக, அமித்ஷா கட்டளைப்படியே எடப்பாடி பழனிசாமி நடப்பதாகவும், பாஜகவுக்கு அடிமையாக அதிமுக மாறிவிட்டது எனவும் திமுக விமர்சித்து வருகிறது.
பரவும் தகவல்
எடப்பாடி பழனிசாமி பரப்புரை வாகனத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்குப் பதிலாக பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் புகைப்படத்தை பகிர்ந்த @MasMasood3 என்ற எக்ஸ் பயனர், “முழு பிஜேபியா மாறிய அதிமுக கட்சி.
பிரச்சார வாகனத்தில் ஜெயலலிதா படத்திற்கு பதில் மோடி படம்” என்று விமர்சனம் செய்திருந்தார்.
~ முழு பிஜேபியா மாறிய அதிமுக கட்சி
— MASS Talks (@MasMasood3) March 26, 2026
~ பிரச்சார வாகனத்தில் ஜெயலலிதா படத்திற்கு பதில் மோடி படம் .
எம்ஜிஆர் விசுவாசிகள் அதிமுகவிற்கு ஓட்டு போடுவது ஒரு பக்கம் ஜெயலலிதா விசுவாசிகள் இனிமேலும் அதிமுகவிற்கு ஓட்டு போட வேண்டுமா சிந்தியுங்கள். pic.twitter.com/cCgWc4Wig0
michaelarun_m என்ற பயனர், “மயிலாப்பூரில் பிரச்சார வேனில் #மோடி படத்துடன் பிரச்சாரத்தை எடப்பாடி துவங்கினார்” என்று குறிப்பிட்டார்.
#VoteForDMK#மயிலாப்பூரில் பிரச்சார வேனில் #மோடி படத்துடன் பிரச்சாரத்தை #எடப்பாடி துவங்கினார்...😁😁
— michael arun (@michaelarun_m) March 25, 2026
முதல்வர் #முகஸ்டாலின் அவர்கள் இது #தமிழ்நாடு Vs #என்டிஏ (டெல்லி) என்று கூறினார் என்பதற்கு இதுவே சாட்சி... 🖤❤️ pic.twitter.com/MY8fTue3vg
மேலும் மோடி புகைப்படம் இடம்பெற்றதாகவே பரவிய பதிவு 1, பதிவு 2 ஆகியவற்றைக் காணலாம்.
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு சரிபார்த்தபோது, அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.
வைரல் புகைப்படத்தை உண்ணிப்பாக கவனித்தபோது அதில் மயிலாப்பூர் என்றும் இடம் குறிப்பிடப்பட்டு இருந்ததையும், 25.03.2025 என தேதி குறிப்பிடப்பட்டு இருப்பதையும் கண்டறிந்தோம். இதனையடுத்து மயிலாப்பூரில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்ட வீடியோவைத் தேடினோம். அதிமுக அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் முழு வீடியோவோம் நேரலையாக பதிவு செய்யப்பட்டிருந்தது.
வீடியோவில் நாம் பார்த்தபோது பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படங்கள் எந்த இடத்திலும் இல்லை என்பதை தெரிந்துகொண்டோம். முகப்பில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புகைப்படம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. வைரல் புகைப்படத்தில் உள்ள காட்சி வீடியோவின் 1.08 மணி நேரத்தில் வருகிறது. ஆனால், அப்போதும் ஜெயலலிதா படமே இருந்தது. எடப்பாடி பழனிசாமியும் இதே வீடியோவைத் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தினத்தந்தி குழுமம் வெளியிடும் ஆங்கிலப் பத்திரிகையான DT next தனது இணையதளத்தில் மயிலாப்பூர் பரப்புரை தொடர்பான புகைப்படத்தை பதிவு செய்துள்ளது. அதிலும் எடப்பாடி பழனிசாமி வாகனம் முன்பு ஜெயலலிதாவின் படம்தான் உள்ளது. தி இந்து பிசினஸ் லைன் இணையதளும் இதே புகைப்படத்தையே பதிவு செய்துள்ளது.
மேலும், எடப்பாடி பழனிசாமி வாகனத்தில் இருப்பது தலைவர்களின் புகைப்படத்தை மாற்றிக் காட்டும் எல்.இ.டி திரை இல்லை, தயார் செய்யப்பட்டு ஒட்டப்பட்ட புகைப்படம்தான் என்பதும் தெளிவாகத் தெரிந்தது. இந்த ஆதாரங்கள் வாயிலாக ஜெயலலிதாவின் படத்தை எடிட் செய்து நீக்கிவிட்டு, அந்த இடத்தில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை மாற்றி வைத்து தவறான தகவலுடன் பரப்பி வருகிறார்கள் என்பது தெரியவந்தது.
முடிவு
எடப்பாடி பழனிசாமி பரப்புரை வாகன முகப்பில் பிரதமர் மோடி படம் இடம்பெற்றுள்ளதாக வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டு சித்தரிக்கப்பட்டது. உண்மையில் ஜெயலலிதா படத்தையே எடப்பாடி பழனிசாமி வைத்துள்ளார் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மைக் கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

