Fri Dec 05 2025 11:16:23 GMT+0000 (Coordinated Universal Time)
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய அதே இடத்தில் பாஜக எம்பி திருமண நாள் விழா கொண்டாடினாரா?
பெஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் வைத்து பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே தனது 25-ஆம் ஆண்டு திருமண நாள் விழாவை கொண்டாடினார் என்று செய்தி பரவும் நிலையில், நிகழ்வு குல்மர்க் எனும் இடத்தில் வைத்து நடைபெற்றது தரவுகள் வாயிலாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

Claim :
பெஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே தனது 25-ஆம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடினார்.Fact :
நிஷிகாந்த் துபே தனது 25-ஆம் ஆண்டு திருமண விழாவை குல்மர்க் எனும் இடத்தில் வைத்து கொண்டாடினார்.
ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தின் பெஹல்காம் பகுதிக்கு அருகேயுள்ள பைசரன் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 அன்று பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் கூடி மகிழ்ந்திருந்தனர். சற்றும் எதிர்பாரா நேரத்தில் காட்டில் மறைந்திருந்த பயங்கரவாதிகள், வெட்டவெளி பகுதியில் இருந்த சுற்றுலாப் பயணிகளை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டு, பலர் படுகாயம் அடைந்தனர். இந்த நேரத்தில் ஒன்றிய அரசான பாஜக பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. மேலும், தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை உடனடியாக தேடி கண்டுபிடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக பல தகவல்களும் சமூக வலைத்தளங்களில் உலா வரத் தொடங்கியுள்ளன. அதில் முக்கியமாக தாக்குதல் நடைபெற்ற இடத்திற்கு அருகே பாஜக எம்பி நிஷிகாந்த் துபே-வின் 25ஆம் ஆண்டு திருமண விழா கோலாகலமாக மிகுந்த பாதுகாப்புடன் நடத்தப்பட்டது என்ற செய்தி ஒரு காணொளியுடன் பரவிவருகிறது.
இது தொடர்பாக கவிஷ் அசீஸ் (@azizkavish) பத்திரிகையாளர் என்று குறிப்பிடப்பட்டுள்ள எக்ஸ் பக்கத்தில், “பா.ஜ.க எம்பி நிஷிகாந்த் துபே கடந்த வாரம் தனது 25வது திருமண ஆண்டு விழாவை பெஹல்காமில் கொண்டாடினார். அங்கு 27 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.
சுமார் 10 நாட்களுக்கு முன்பு ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிரமாண்டமான விழாவில் பல கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். அந்த இடத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஒரு இரவுக்கு மட்டும் ‘தி கைபர்’ போன்ற ஒரு ஆடம்பரமான ஹோட்டலின் தங்க வேண்டும் என்றால் ரூ.58,000 செலவாகும். எம்பிக்கு கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்பாவி சுற்றுலாப் பயணிகள் இறக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டனர்,” என்று பதிவிடப்பட்டிருந்தது. இதனுடன் எம்பி தன் மனைவியுடன் நடனம் ஆடும் காணொளியும் இணைக்கப்பட்டிருந்தது.
வைரல் பதிவின் இணைப்பை இங்கே காணலாம்.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மை சரிபார்ப்பு
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி தவறாக பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டது.
உண்மையில் பா.ஜ.க மக்களவை உறுப்பினர் தனது 25-ஆம் ஆண்டு திருமண நாளை பயங்கரவதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் வைத்துக் கொண்டாடினாரா என்பதை அறிய முயற்சித்தோம். இதற்காக, ‘பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே திருமண நாள் விழா’ என்று இணையத்தில் தேடினோம். அப்போது இது தொடர்பான சில செய்திகள் வெளியாகி இருந்தன.
அதில், பெஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு முன்னதாக ‘குல்மார்க்’-இல் நிஷிகாந்த் துபேயின் திருமண நாளை விஐபி-கள் புடைசூழ பலத்த பாதுகாப்புடன் நடந்தது எனத் தலைப்பிடப்பட்ட செய்தியை ‘பைனான்சியல் எக்ஸ்பிரஸ்’ செய்தித் தளம் வெளியிட்டிருந்தது.
இந்த தகவலில் அடிப்படையில், நிஷிகாந்த் துபே திருமண நாள் விழா நடந்தது ‘குல்மார்க்’ என்பதும், அது பைசரன் பள்ளத்தாக்கில் நடக்கவில்லை என்பதும் உறுதியானது. இதே போன்ற செய்தியை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ மற்றும் ‘வார்தா பாரதி’ ஆகிய செய்தித் தளங்களிலும் பார்க்க முடிந்தது.
மேலும், தாக்குதல் நடந்த இடத்தில் நடக்கவில்லை என்றால், அதன் அருகில் இருக்கும் இடமா ‘குல்மர்க்’ என்ற கேள்வி எழுந்தது. அதனை ஆராய, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய பைசரன் பள்ளத்தாக்கில் (Baisaren Valley) இருந்து குல்மர்க் எனும் இடத்திற்கான இடைபட்ட தூரத்தை ஆராய ‘கூகுள் மேப்ஸ்’ செயலியைப் பயன்படுத்தினோம். அப்போது, பைசரனில் இருந்து குல்மர்கை அடைய 146 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும் என்று காட்டப்பட்டது. மேலும், கார் அல்லது பைக்கில் இந்த இரு இடங்களுக்கு இடையிலான பயண தூரம் குறைந்தது 3:30 மணிநேரமாக இருந்தது. இதற்கான கூகுள் மேப்ஸ் தேடல் புகைப்படம் கீழே இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்தக்கட்டமாக, சமூக வலைத்தளங்களில் பரவும் செய்தியைப் போல, மக்களவை உறுப்பினர் திருமண நாள் விழா பெஹல்காம் பகுதியில் நடைபெற்றதா என்பதை அறிய ‘குல்மர்க்’ எந்த இடத்தில் அமைந்துள்ளது என்று இணைய உலாவியில் தேடினோம். அப்போது, பாரமுல்லா மாவட்டத்தின் ஒரு சிறிய நகரம் ‘குல்மர்க்’ என்பது, அம்மாவட்ட அரசு இணையதளத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முடிந்தது.
முடிவு:
கிடைத்தத் தகவல்களின் அடிப்படையில், பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே திருமண விழா நடந்தது குல்மர்க் என்பதும், குறிப்பிட்ட இடம் தாக்குதல் நடந்த பைசரன் பள்ளத்தாக்கில் இருந்து சுமார் 146 கிமீ தொலைவில் இருப்பதும் உறுதியானது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் சமூக வலைத்தளங்களில் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.
Claim : பெஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் பாஜக எம்.பி நிஷிகாந்த் துபே தனது 25-ஆம் ஆண்டு திருமண விழாவை கொண்டாடினார்.
Claimed By : Social Media Users
Claim Reviewed By : TeluguPost FactCheck
Claim Source : Social Media
Fact Check : False
Next Story

