Sun Feb 09 2025 20:31:41 GMT+0000 (Coordinated Universal Time)
உண்மை சரிபார்ப்பு: திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் புதிதாக தர்கா திறக்கப்பட்டதா?
திருவண்ணாமலை கோயில் கிரிவலப் பாதையில் புதிய தர்கா தொடங்கப்பட்டுள்ளதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.

Claim :
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் செல்லும் பாதையில் புதிதாக தர்கா முளைத்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் காணொளி ஒன்று பரப்படுகிறது.Fact :
50 ஆண்டுகளாக இதே இடத்தில் தர்கா இருந்துவருவதாக அரசுப் பதிவேட்டில் உள்ளதால், பரப்பப்படுவது தவறான செய்தி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்தாண்டு திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் நெடுங்குணம் அருகே வெள்ளைமலை கிராமத்தின் கிழக்குப் பகுதியின் வயல்வெளியில் உள்ள பாறையில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒற்றுமையோடு வாழ வழிவகை செய்யும் 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாறை கல்வெட்டு குறித்து திருக்கோவிலூர் கபிலர் தொன்மை ஆய்வு மையத்தின் தலைவர் சிங்கார உதியன் பிபிசி செய்தி நிறுவனத்திடம் பேசியிருந்தார்.
இதே செய்தியில், தஞ்சாவூர் அருகே திருநாகேஸ்வரம் கோவிலின் உட்பகுதியில் 'குன்று மாமுலையம்மன்' சன்னதி உள்ளது. இச்சன்னதியின் மூலையில் ஒரு பலகைக்கல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 39 வரிகள் பொறிக்கப்பட்டிருக்கும் அக்கல்வெட்டு, சகம் 1705ஐ (கி.பி.1783) காலத்தை சேர்ந்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார். இதில் இந்து-முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து வழிபாடு நடத்தியது தொடர்பான தகவல் உள்ளது என்று திருச்சி ஆற்றுப்படை அமைப்பின் நிறுவனர் பார்த்திபன் தெரிவித்திருக்கிறார்.
மக்கள் மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரும் நிலையில், இந்துக்கள் வழிபடும் சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் செல்லும் கிரிவலப் பாதை தொடர்பான ஒரு செய்தி இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது. அந்த பதிவில், அண்ணாமலையாருக்குச் சொந்தமான கிரிவலப் பாதையில் புதிதாக முளைத்துள்ள தர்கா என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கே சத்திரியன் (@Tnagainstnaxals) எனும் பயனர் தனது எக்ஸ் பக்கத்தில், “திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு சொந்தமான கிரிவல பாதையில் புதிதாக முளைத்துள்ள தர்கா.
இப்போ தர்கா, அடுத்தது வக்பு சொத்து அடுத்து அந்த மலையே தர்காவுக்கு சொந்தன்னு சொல்லுவாங்க! ஏண்டா இப்படி அநியாயம் பன்றிங்கன்னு கேட்டா நாம மதவெறிய. இந்துக்களே விழித்து கொள்ளுங்கள்,” என எழுதி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் எச்.ராஜா ஆகியோரை டேக் செய்து ஒரு காணொளியையும் பதிவேற்றியுள்ளார்.
இதேபோல, தத்வம்சி (Tathvam-asi / @ssaratht) எனும் எக்ஸ் பயனர், “This (emoji) suddenly came up next to one of the entrances to Arunachalam temple. As per the video, it came up within past 1 year. Urging Hindu organisations to do the needful and remove this encroached dargah. All land surrounding temple is temple’s land only. How can this be allowed?,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதை தமிழில் மொழிபெயர்த்தால், அருணாச்சால கோயில் (அண்ணாமலையார் கோயிலை இப்படியும் அழைப்பர்) முகப்பில் திடீரென வந்த தர்கா, வீடியோவை பார்த்தால் ஒரு ஆண்டுக்குள்ளாக இது வந்திருக்கிறது. இந்து அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமித்து கட்டப்பட்ட தர்காவை அகற்றவேண்டும். கோயிலை சுற்றியுள்ள இடங்கள் அவற்றிற்கு சொந்தமானது. இதை எப்படி அனுமதித்தீர்கள் என்று அர்த்தம் கிடைக்கும்.
வைரல் பதிவின் இணைப்பும், அதன் காப்பக இணைப்பும் இங்கே உள்ளது.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
Telugupost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த காணொளி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த காணொளியின் உண்மைத் தன்மையை அறிய முதலில், கூகுள் மேப்ஸ் தளத்தில் அப்படியொரு தர்கா உள்ளதா என ஆய்வு மேற்கொண்டோம். அப்போது, ‘Hazrat Mahan Saidthani Bee dargah’ என்ற பெயரில் தர்கா ஒன்று கோயிலின் ராஜ கோபுரத்துக்கு சற்று தொலைவில் காணப்பட்டது. எனவே, தர்கா இங்கு புதிதாக முளைததா என்ற கூற்றுக்கு விடை தேட, ‘திருவண்ணாமலை அண்ணாமலை கிரிவலப் பாதையில் தர்கா’ என்று கூகுள் தேடுபொறியில் ஆராய்ந்தோம்.
அப்போது, தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு, இது தொடர்பாக ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில், இது முற்றிலும் பொய்யானத் தகவல் என்று குறிப்பிட்டுள்ள, தமிழ்நாடு உண்மை கண்டறியும் குழு (TN Fact Check / @tn_factcheck) "தர்கா அமைந்துள்ள இடமானது திருக்கோயிலுக்கு தொடர்புடையது அல்ல என்றும், சுமார் 50 ஆண்டுகளுக்கு மேலாக தர்கா இருப்பதாகவும் திருவண்ணாமலை நகர நில அளவை பதிவேட்டின்படி தெரிய வருகிறது. நகர கணக்கெடுப்பு பதிவேட்டில் குறிப்பு கலத்தில் மசூதி கட்டிடம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, சமூக வலைத்தளங்களில் திருக்கோயில் இடம் குறித்து பரவி வரும் தகவலானது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான செய்தியாகும்" என்று அருணாசலேசுவரர் திருக்கோயில் செயல் அலுவலர் விளக்கமளித்துள்ளார் என தகவல் வெளியிட்டிருந்தது.
மேலும், அரசின் இதே உண்மை கண்டறியும் குழு (TN Fact Check) முகநூல் பக்கத்தில் ஒரு காணொளியை இணைத்திருந்தது. அதில் தர்கா இருக்கும் இடத்தில் நில அளவை பதிவேடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டமாக, இது தொடர்பான செய்திகள் ஏதும் தமிழ்நாடு ஊடகங்களில் வெளியாகி இருக்கின்றனவா என்பது குறித்து ஆய்வு செய்தோம். அப்போது இது தொடர்பான செய்தியை ‘தந்தி’ செய்தித் தளம் வெளியிட்டிருந்தது. அதில், “ஒருபக்கம் திருப்பரங்குன்றம் மலை தர்கா விவகாரம் புயலை கிளப்பியுள்ளது. அந்த விவகாரம் பற்றிய அனல் இன்னும் அடங்காத சூழலில், திருவண்ணாமலை அண்ணாமலையாருக்கு சொந்தமான இடத்தில் தர்கா என்ற பொய்யானத் தகவல் பரவிவருகிறது,” எனக் குறிப்பிட்டு செய்தி எழுதப்பட்டிருந்தது.
எனவே, மேற்கொண்ட ஆய்வுகளின்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலப்பாதையில் எந்த தர்காவும் ஆக்கிரமித்து புதிதாகக் கட்டப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. தவறான தகவல்களை பரப்புவது சட்டப்படி குற்றம் என்பதை சமூக வலைத்தள பயனர்கள் புரிந்துகொள்ள வேண்டும். செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.
Claim : திருவண்ணாமலை கோயில் கிரிவலப் பாதையில் புதிய தர்கா தொடங்கப்பட்டுள்ளதாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
Claimed By : Social Media Users
Claim Reviewed By : TeluguPost FactCheck
Claim Source : Social Media
Fact Check : False
Next Story